கர்ப்பம் என்றால் என்ன?

                                      Sri...

கர்ப்பம்

கர்ப்பம் என்றால் என்ன?

கர்ப்பம் என்பது கர்ப்பமுறுதலில் இருந்து குழந்தைப்பேறு வரை உள்ள காலகட்டம் ஆகும். முட்டை விந்தணுவால் சினைப்படுத்தப்பட்ட பின் அது கருப்பையின் உட்புறத்தில் பதியமாகி நஞ்சுக்கொடியாகவும் முளையமாகவும் (முதிராக்கரு) பின் முதிர்கருவாகவும் உருவாகிறது. கர்ப்ப காலம் பெண்ணின் இறுதி மாதவிடாயின் முதல் நாளில் தொடங்கி பொதுவாக 40 வாரங்கள் நீடிக்கின்றன. இது மூன்று மாதங்களை உள்ளடக்கிய மூன்று மும்மாதகாலமாக பகுக்கப்படுகிறது.

கர்ப்ப காலத்தின் கட்டங்கள் எவை?

பொதுவாக கர்ப்ப காலம் மும்மூன்று மாதங்கள் அடங்கிய மூன்று பருவங்களாக பகுக்கப்படுகிறது. மகப்பேறு நிபுணர்கள் ஒவ்வொரு மும்மாதமும் 12 வரங்கள் கொண்டதாக வரையறுக்கின்றனர். ஆக சராசரியான கர்ப்ப காலம் 40 வாரங்களாகும். இது பெண்ணின் உடலியலைப் பொறுத்தது.

முதல் மும்மாதம் (முதல் வாரத்திலிருந்து 12 வரை)

கர்ப்ப காலத்தின் முதல் 12 வாரங்கள் முதல் மும்மாதமாகக் கருதப்படுகிறது. உண்மையில் கர்ப்பம் இல்லை எனினும் கர்ப்பத்தின் முதல் இரு வாரங்களில் இருந்து முதல் மும்மாதம் கணக்கிடப்படுகிறது. ஆனால் இவை கருவுறுவதற்கு முன்னான இரு வாரங்களாகும். இவற்றில் பெண்ணின் இறுதி மாதவிடாய் சேர்க்கப்பட்டுள்ளது.

மூன்றாவது வாரத்தில் கருவுறுதலும், நான்காவது வாரத்தில் கருப்பதியமும் உண்டாகிறது. நான்காவது வாரத்தில் சினைப்படுத்தப்பட்ட கருமுட்டை கருப்பையை சென்றடைந்து அதற்குத் தேவையான சத்துணவைக் கொண்டுள்ள கருப்பைச் சுவருக்குள் பதியமாகிறது. பெண்ணுடலின் ஒவ்வொரு மண்டலத்தையும் பாதிக்கும் இயக்குநீர் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கர்ப்பமுற்ற முதல் வாரத்திலேயே இம்மாற்றங்கள் அறிகுறிகளை உண்டாக்கலாம். அறிகுறிகளாவன:

 • காலைச் சோர்வு
 • அதிகக் களைப்பு
 • மென்மையாகி வீங்கும் மார்பகங்கள், முலைக்காம்பு புடைத்தல்
 • சில உணவுகள் மேல் வெறுப்பும் அவாவும்
 • மனநிலை ஊசலாட்டம்
 • எடை கூடுதல் அல்லது குறைதல்
 • நெஞ்செரிச்சல்

இரண்டாவது மும்மாதம் (13 - 28 வாரம்)

பெரும்பாலான பெண்கள் இக் காலகட்டத்தில் தெம்பாக இருப்பர். எடை கூடத் தொடங்கும். காலை சோர்வு போன்ற அனைத்து அறிகுறிகளும் குறைந்து அடியோடு மாறும். தனது இயல்பான அளவை விட கருப்பை கர்ப்பகாலத்தில் 20 மடங்கு வரை விரிவடையலாம்.

 • வயிறு, மார்பு, தொடை அல்லது பிட்டத்தில் நீட்சிக் குறிகள்
 • முலைக்காம்பைச் சுற்றி தோல் கறுப்பாதல்
 • முதுகு, வயிறு, அரை, தொடை போன்ற இடங்களில் வலி
 • மூட்டுக்கள், விரல்கள், முகத்தில் வீக்கம்
 • தொப்புளில் இருந்து பிறப்புறுப்பு வரை தோலில் வரி
 • கன்னம், நெற்றி, மூக்கு, மேலுதடு ஆகியவற்றில் மரு. இம்மருக்கள் முகத்தின் இருபக்கமும் ஒன்றுபோல் இருக்கும். இதனைக் கர்ர்ப்பத்தின் முகமூடி என்றும் அழைப்பர்.
 • கரங்களில் மறப்பு அல்லது கூச்சம் (கார்ப்பல் டனல் அறிகுறி)
 • வயிறு, கால் அடியில் அரிப்பு

மூன்றாவது மும்மாதம் (29 - 40 வாரம்)

கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதிக பட்ச எடை கூடுதல் இக் காலகட்டத்தில் உண்டாகிறது. கரு வேகமாக வளர்ந்து ஒரு நாளைக்கு 28 கிராம் வரை கூடும். கரு பிறப்புக்கு ஆயத்தமாகி கீழ் நோக்கி கவிழ்வதால் பெண்ணின் வயிறு மாற்றமடைந்து சரியும்.

 • மூச்சிறைத்தல்
 • நெஞ்செரிச்சல்
 • கணுக்கால், விரல்கள், முகத்தில் வீக்கம்
 • மார்பகம் மென்மையாகி நீர் போன்ற முதல் பால் கசிதல்
 • தொப்புள் வெளித்தள்ளுதல்
 • சரியான தூக்கமின்மை
 • வயிற்றில் குழந்தையின் அசைவு
 • தசைச்சுருக்கம்: உண்மை அல்லது பொய் கர்ப்ப வலியின் குறி

பிறப்புக்கு முந்திய பராமரிப்பு என்றால் என்ன ?

பிறப்புக்கு முந்திய பராமரிப்பு கர்ப்ப காலத்தில் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படும் முறையான மருத்துவ மற்றும் பிற கவனிப்பை இது குறிக்கிறது. இது ஒரு, வருமுன் காக்கும் கவனிப்பு ஆகும். இதில் முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கர்ப்ப காலம் முழுவதும் வரக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளை இதனால் மருத்துவர்கள் கண்டு மருத்துவம் அளித்து அவற்றைத் தடுக்கக் கூடும். தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை இதன்மூலம் பேணப்படுகிறது. இதில் அடங்குவன:

 • முதல் இரு மும்மாதங்களிலும் மாதந்தோறும் மருத்துவரிடம் செல்லுதல் (1-28 வாரங்கள்)
 • 28-36 மாதங்கள்: மாதம் இருமுறை மருத்துவரிடம் செல்லுதல்
 • 36-வது வாரத்துக்குப் பின் வாரந்தோறும் மருத்துவரிடம் செல்லுதல் (பிறப்பு: 38-40 வரத்தில்)

பிறப்புக்கு முந்திய கண்டறிதலும் பரிசோதனையும்

பொதுவாக உடல் பரிசோதனையில் அடங்குவன:

 • கர்ப்பமுற்ற தாய்மாரின் மருத்துவ வரலாறு
 • இரத்த அழுத்தம்
 • உயரமும் எடையும்
 • இடுப்புச் சோதனை
 • டாப்லர் கருவின் இதயத் துடிப்பு கண்காணிப்பு
 • இரத்தம், சிறுநீர் சோதனை
 • கவனித்து வருகிறவருடன் கலந்தாலோசனை

இந்திய அரசின் விதிமுறைகள் படிபதிவு செய்யும் முதல் வருகையோடு சேர்த்து ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் குறைந்த பட்சம் நான்கு தடவை பிறப்புக்கு முன்னான சோதனைக்கு மருத்துவரிடம் வருகை தர வேண்டும்.

பரிந்துரை செய்யப்படும் பிறப்புக்கு முந்திய மருத்துவ கவனிப்பு வருகை:

 • முதல் வருகை: 12 வாரங்களுக்குள் அல்லது கர்ப்பம் என்று ஐயுற்றவுடன்
 • இரண்டாவது வருகை: 14-26 வாரங்களுக்கு இடையில்
 • மூன்றாவது வருகை: 28-34 வாரங்களுக்கு இடையில்
 • நான்காவது வருகை: 36 லிருந்து இறுதி வாரம் வரை

கேளா ஒலி

இரண்டாவது மும்மாதத்தில் ஏறத்தாழ 20 வாரத்தில் பொதுவாக மகப்பேற்று கேளாஒலி சோதனை செய்யப்படுகிறது. இது பாதுகாப்பான தாகும். கர்ப்பத்தைக் கண்காணிக்க 35 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கேளா ஒலி கீழ்வருவனவற்றிற்கும் பயன்படுகிறது:

 • ஒன்றிற்கு மேற்பட்ட கருக்களைச் சோதிக்க
 • தாய்க்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் கணிக்க (உ.ம்., கருக்கலைதல், சினைமுட்டை சிதைவு, இடம் மாறி கருவுறுதல், அசாதாரண கர்ப்பம்).
 • கரு குறைபட்டைக் கண்டறிய (கோணக்கால், முதுகெலும்புப் பிளவு, பிளந்த அண்ணம், மூடிய உள்ளங்கை)
 • கருவளர்ச்சிக் குறைபாட்டைக் கண்டறிய
 • கருவின் அவயவ வளர்ச்சியைச் சோதிக்க (இதயம், மூளை, கல்லீரல், வயிறு, தலையோடு, பிற எலும்புகள்)
 • பிரச்சினை உள்ளதா என்று பனிக்குட நீரையும் தொப்புள் கொடியையும் சோதித்தல்
 • பிறப்பு நாளை கணக்கிடல் (அளவீடுகள் மற்றும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு)

பொதுவாகக் கேளா ஒலி சோதனை அசாதாரண நிலைகள் என ஐயுறும்போதோ அல்லது கீழ்வரும் அட்டவணைப்படியோ நிகழ்த்தப்படும்:

 • 7 வது வாரம் — கர்ப்பத்தை உறுதிப்படுத்தவும், குறைபாடு அல்லது இடம்விலகலைக் கண்டறியவும், பிறப்பு நாளை கணிக்கவும்.
 • 13-14 வாரங்கள் — டவுண் நோய்க்குறி சாத்தியத்தை மதிப்பிட
 • 18-20 வாரங்கள்
 • 34 வாரங்கள் — அளவையும் நஞ்சுக்கொடி இருப்புநிலையையும் மதிப்பிட

ஆலோசனை

கீழ்க்காணும் பிரச்சினைகள் பற்றி பெண்களுக்கு ஆலோசனை கூற வேண்டும்:

 • பேறுகாலத்திற்குத் திட்டமிட்டு ஆயத்தமாகப் பெண்ணுக்கு உதவி செய்ய வேண்டும் (பேறுகால ஆயத்தம்/நுண் பேறுகால திட்டம்).
 • பேறுகாலத்திற்கான இடம், கவனித்துக்கொள்பவர் ஆகியவற்றை இது உள்ளடக்கி இருக்க வேண்டும்.
 • மருத்துவமனை பேற்றின் நன்மைகள் மற்றும் வீட்டுப் பேற்றின் ஆபத்துகள்.
 • அவசர காலத்தில் எங்கு செல்ல வேண்டும், சென்று வருவதை எவ்வாறு ஏற்பாடு செய்யலாம், பணம், தேவைப்பட்டால் இரத்த தானம் அளிப்பவர் ஆகியவற்றைப் பற்றி பெண்ணுக்கு ஆலோசனை வழங்கல்.
 • பேறுகால வலி, சிக்கல்கள் குறித்துப் பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அறிவுறுத்தல்.
 • பேறுகாலத்துக்கு முந்திய, பிந்திய பேணலின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தல்.
 • சத்துணவு மற்றும் ஓய்வு பற்றிய ஆலோசனை.
 • முழுவதும் தாய்ப்பாலூட்டல் உட்பட தாய்ப்பாலைப்பற்றி பெண்ணுக்குத் தெரிவித்தல்.
 • கர்ப்பகாலத்தில் உடலுறவு பற்றிய தகவல்களை அளித்தல்.
 • வீட்டு வன்முறை பற்றி எச்சரித்தல் (வன்முறையால் பெண்ணுக்கும் கருவுக்கும் ஏற்படும் விளைவுகளை விவரித்தல்)
 • குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவித்தல்

மருத்துவமனைப் பேற்றின் சாதகங்கள்

அனைத்துக் கர்ப்பிணிகளையும் மருத்துவ மனைப் பேற்றையே நாட ஊக்கப்படுத்த வேண்டும்.

ஒரு சுகாதார நிலையத்தில் ஏன் குழந்தைப் பேற்றை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பெண்ணுக்கு விளக்கி கீழ்க்காண்பவற்றை வலியுறுத்த வேண்டும்:

 • கர்ப்ப காலத்தில், பேற்றின் போது அல்லது பேற்றுக்கு முந்திய கட்டத்தில் என்று எப்போது வேண்டுமானாலும் சிக்கல்கள் உருவாகலாம். இச்சிக்கல்கள் எப்போது நிகழும் என்று எல்லா நேரத்திலும் கணிக்க இயலாது. இதனைத் திறம்பெற்றவர்களைக் கொண்டு சுகாதார நிலையத்தில் கையாளவில்லையானால் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்து ஏற்படும்.
 • சுகாதார நிலையத்தில் பணியாளர்களும், கருவிகளும், பொருட்களும், மருந்துகளும் இருப்பதால் தகுந்த கவனிப்பை நல்க முடியும். ஆலோசனைக்கான கட்டமைப்பு இருப்பதால் தேவைப்படும் போது நிபுணர் ஆலோசனைகளையும் பெறமுடியும்.

கர்ப்ப காலத்தில் வயிற்று வலி ஏன் வருகிறது?

கர்ப்ப காலத்தில் வயிற்றில் உண்டாகும் அசௌகரியங்கள் இயற்கையே. அதில் தீங்கு எதுவும் இல்லை. கடுமையானதும் தொடர்ந்து இருப்பதுமான வயிற்றுவலியை அலட்சியப் படுத்தக் கூடாது.

வயிற்று வலியுடன் வெள்ளைபடுதல், இரத்தப்போக்கு, காய்ச்சல், குளிர், பிறப்புறுப்புக் கசிவு, மயக்கம், சிறுநீர் கழிக்கும்போது சிரமம் ஆகியவற்றுடன் ஓய்வுக்குப் பின்னும் வலி குறையாமல் இருந்தால் மருத்துவரை நாட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் வயிற்று வலிக்கு இட்டுச்செல்லும் கடுமையான பிரச்சினைகள் எவை?

இடம் மாறிய கர்ப்பம்

சினைப்படுத்தப்பட்ட முட்டை கருப்பைக்கு வெளியே, பொதுவாக கருமுட்டைக் குழாய் ஒன்றில் பதியம் ஆகும்போது இடம் மாறிய கர்ப்பம் உண்டாகிறது. ஆரம்ப கட்டத்தில் பிடிப்பு போன்ற சில அறிகுறிகளை ஏற்படுத்தும்.

சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் இது மிகவும் உயிருக்கு ஆபத்தான ஒன்றாகும். கீழ்வரும் அறிகுறிகளில் ஏதாவது தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்:

 • வயிற்று அல்லது இடுப்பு வலியோ அசௌகரியமோ,
 • பிறப்புறுப்புக் கசிவு அல்லது இரத்தப்போக்கு (சிவப்பு அல்லது பழுப்பு, அதிகம் அல்லது குறைவு, தொடர்ந்து அல்லது விட்டுவிட்டு). உடல் செயல்பாடு, மலம் கழித்தல் அல்லது இருமும்போது வலி அதிகமாதல்.
 • தோளில் வலி.

கர்ப்பம்கலைதல்

முதல் 20 வாரங்களுக்குள் கரு கலைதலே கர்ப்பம் கலைதல் ஆகும். பிறப்புறுப்பு கசிவு அல்லது இரத்தப்போக்கே முதல் அறிகுறி. அதற்குப் பின் சில மணி நேரம் அல்லது சில நாட்கள் தொடர்ந்து வயிற்று வலி.

இரத்தப் போக்கு குறைவாக அல்லது அதிகமாக இருக்கலாம். வலி தசைப் பிடிப்பு போன்றோ தொடர்ந்தோ, குறைவாகவோ அல்லது கடுமையாகவோ, பின்முதுகு அல்லது இடுப்பு அழுத்தம் போலவோ இருக்கும்.

குறைப் பிரசவம்

கருவுற்று 37 வாரத்துக்கு முன் ஏற்படும் பிரவசம்.

நச்சுக்கொடி முறிவு

பிறப்புக்கு முன் நச்சுக்கொடி கருப்பையில் இருந்து தனியாகப் பிரியும் ஆபத்தான நிலையே நச்சுக்கொடி முறிவாகும்.

அறிகுறிகள் பல்திறப்பட்டன. சில சமயம் திடீர் வெளிப்படையான இரத்தப்போக்கு இருக்கும். சில நேரங்களில் முதலில் வெளிப்படையான இரத்தக்கசிவு இருக்காது அல்லது சிறிதளவு கசிவும் இரத்தப்போக்கும் இருக்கும்.

சிறுநீர்ப்பாதைத் தொற்று

சிறுநீரகத் தொற்று முதற்கொண்டு கர்ப்ப காலத்தில் அனைத்து சிறுநீர்ப்பாதை தொற்று நோய்களும் ஏற்படும்.

சிறுநீர் கழிக்கும்போது வலி, அசௌகரியம் அல்லது எரிச்சல், இடுப்பில் அசௌகரியம் அல்லது கீழ்வயிற்று வலி (பெரும்பாலும் இடுப்பு எலும்புக்கு மேல்), சிறுநீர்ப் பையில் மிகக் குறைவாக சிறுநீர் இருந்தாலும் அடிக்கடியும் தவிர்க்கமுடியாத படியும் சிறுநீர் கழிக்கும் உணர்வு, கலங்கிய, துர்நாற்றத்துடன், குருதியுடன் சிறுநீர் ஆகியவையே சிறுநீர்ப்பைத் தொற்றின் அறிகுறி.

பிற காரணங்கள்

வயிற்று வலிக்குப் பிற காரணங்களும் உண்டு. வயிற்று வைரஸ், நச்சுணவு, குடல்வால் அழற்சி, சிறுநீரகக்கல், கல்லீரல் அழற்சி, பித்தப்பை நோய், கணைய அழற்சி, நார்த்திசுக்கட்டி, குடல் அடைப்பு ஆகியவை பரவலான காரணங்கள் ஆகும்.

தாய்ப்பாலூட்டுதல்

கர்ப்ப காலமே தாய்ப்பாலூட்டலின் நன்மைகள் குறித்துத் தாய்க்கு ஆலோசனை கூறத் தகுந்த நேரமாகும். இந்தியாவில் தாய்ப்பாலூட்டல் பரவலாக இருந்தாலும் பின்வரும் செய்தியைத் தாயாகப் போகிறவர்களுக்குத் தர வேண்டும்.

பிறந்தவுடன், குறிப்பாக ஒரு மணி நேரத்துக்குள், அறுவை மூலம் பிறப்பாக இருந்தாலும், தாய்ப்பால் ஊட்டுவது சிறந்ததாகும்.

கர்ப்ப காலத்தில் உடல் செயல்பாடுகள் முக்கியமா?

கர்ப்ப காலத்தில் சரியான உணவு முறையில் இருந்து உடல்நலம் பேணுதல் மற்றும் ஆரோக்கியமாக இருத்தல் வரை அனைத்தும் உடற்தகுதியோடு கைகோர்த்துச் செல்கிறது. ஆரோக்கியமான கர்ப்பிணிப்பெண் ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரம் மிதமான உடல் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உடல் செயல்பாடுகளால் விளையும் சிறப்பான நன்மைகள்

 • மலச்சிக்கல், சுருள்சிரை நாளங்கள், முதுகுவலி, சோர்வு போன்ற கர்ப்ப கால வலிகளையும் பிரச்சினைகளையும் உடற்பயிற்சி இலகுவாக்கும்.
 • பிரசவத்தை எதிர்கொள்ளவும் விரைவாக நலம்பெறவும் உடல் உழைப்பில் ஈடுபடும் கர்ப்பிணிப் பெண் ஆயத்தமாய் இருக்கிறார்.
 • கர்ப்ப காலத்தில் முன்சூல் வலிப்பும், கர்ப்பகால நீரிழிவும் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கக் கூடும்.
 • பேறுகாலத்திற்குப் பின் உடற்தகுதி உள்ள பெண்ணால் விரைவாக உடல்நலத்திற்கு ஏற்ற உடலிடையை அடைய முடியும்.
 • முறையான உடல்பயிற்சி கர்ப்ப காலத்தில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
 • செயல்பாட்டுடன் இருந்தால் உளநலம் பாதுகாக்கப்படும். உடற்பயிற்சி செய்துவரும் கர்ப்பிணிப் பெண்கள் சுய மதிப்போடு இருப்பர்; மனவழுத்தமும் மனக்கலக்கமும் ஏற்படும் ஆபத்து குறையும்.

உடற்தகுதிக்கான திட்டத்தைத் தேர்ந்து எடுக்கும்போது கீழ்வரும் குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும்:

 • குத்துச்சண்டை, கால்பந்து, கூடைப்பந்து, பனி ஆக்கி போன்ற வயிற்றில் அடிபடக்கூடிய வாய்ப்புள்ள செயல்பாடுகளைத் தவிர்க்கவும்.
 • குதிரையேற்றம், மலைச்சறுக்கு, சீருடற்பயிற்சிகள் போன்ற கீழேவிழும் வாய்ப்புகள் உள்ள செயல்களில் அறவே ஈடுபட வேண்டாம்

பாதுகாப்பான ஆரோக்கியமான உடல் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகள்

பாதுகாப்பான ஆரோக்கியமான உடற்பயிற்சிக்குப் பின் வரும் குறிப்புகளைக் கடைபிடிக்கவும்:

 • மெதுவாகத் தொடங்கி, படிப்படியாக வேகப்படுத்தி, மெதுவாக முடிக்கவும்
 • உடல் பயிற்சி எடுக்கும் போது உங்களால் பேச இயல வேண்டும். அல்லது நீங்கள் மிகையாக செய்கிறீர்கள் என்று அர்த்தம்.
 • அடிக்கடி இடையில் நிறுத்திப் பின் தொடரவும்
 • முதல் மும்மாதம் முடிந்த உடன் பின்புறம் வளையும் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டாம். இது முக்கிய நரம்புகளில் அழுத்தத்தை அதிகரித்து குழந்தைக்கு இரத்த ஓட்டம் செல்வதை பாதிக்கும்.
 • குதித்தல், துள்ளல், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அசைவுகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். கர்ப்ப காலத்தில் இணைப்புத் தசைகள் எளிதாக இழுபடும். இதனால் இத்தகைய அசைவுகளினால் மூட்டுக் காயங்கள் ஏற்படும் அபாயம் உண்டு.
 • சமநிலை இழக்காது பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் குழந்தை வளர வளரப் புவி ஈர்ப்பு மையம் மாறுபடுவதால் கீழே விழும் அபாயம் அதிகம். இக்காரணத்தால் மூன்றாம் மும்மாதத்தை நெருங்கும் போது நடையோட்டம், மிதிவண்டி, மட்டை வைத்து ஆடும் விளையாட்டுக்கள் ஆகியவை அபாயகரமானது.
 • அதிக உயரமான இடங்களில் உடற்பயிற்சி எடுக்கக் கூடாது (6000 அடிக்கு அதிகமாக). குழந்தைக்குத் தேவையான உயிர்வளி கிடைக்காமல் போகலாம்.
 • உடல் பயிற்சிக்கு முன்னும், உடல் பயிற்சியின் போதும், பின்னும் அதிக நீராகாரத்தை அருந்த வேண்டும்.
 • அதிக வெப்பமும், காற்றில் ஈரப்பதமும் உள்ள நேரத்தில் உடல் பயிற்சி எடுக்க வேண்டாம்.
 • அசௌகரியம், மூச்சிறைப்பு, அல்லது களைப்பு ஏற்பட்டால் ஓய்வுக்குப் பின் உடல்பயிற்சியைத் தொடரவும்.

கீழ்வருவனவற்றில் ஏதேனும் ஏற்பட்டால் உடல்பயிற்சியை நிறுத்திவிட்டு உடனே மருத்துவரை அணுகவும்:

 • தலைச்சுற்று
 • தலைவலி
 • நெஞ்சு வலி
 • கெண்டைக்கால் தசை வலி அல்லது வீக்கம்
 • வயிற்று வலி
 • பார்வை மங்குதல்
 • பிறப்புறப்பில் கசிவு
 • பிறப்புறப்பு இரத்தப்போக்கு
 • கரு அசைவுக் குறைதல்
 • பிடிப்புகள்

இடுப்புக்கு பயிற்சி கொடுக்கவும்

மலக்குடல், பிறப்புறுப்பு, சிறுநீர் வடிகுழாய் ஆகியவற்றை இடுப்புத் தளத் தசைகள் தாங்குகின்றன. இத் தசைகளை வலுப்படுத்தி பிரசவத்தின் போது உந்தவும், பிரவசத்துக்குப் பின் மீளவும், கெகல் உடல்பயிற்சி துணைபுரியும். சிறுநீர்ப்பை கசிவையும் மூலநோய் அபாயத்தையும் கட்டுப்படுத்தவும் இது உதவி செய்யும்.

இடுப்புத்தள தசைகள்தான் சிறுநீர்ப்போக்கைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் சுருக்க வேண்டிய சரியான தசையைக் கண்டு பிடிப்பது கடினமாகும். சிறுநீர்க் கழிப்பதைத் தடுக்கும் தசையே சரியான தசை என உடற்பயிற்சி செய்யும்போது உறுதியாக இருக்கலாம். அல்லது பிறப்புறுப்பில் ஒரு விரலை வைத்துக்கொண்டு சுருக்கவும். விரலைச் சுற்றி அழுத்தத்தை உணர்ந்தால் இடுப்புத் தள தசையை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். வயிறு, கால்கள் அல்லது பிற தசைகளைக் கட்டிப்படுத்த முயற்சிக்க வேண்டாம்.

கெகல் உடற்பயிற்சி என்றால் என்ன?

 1. மூன்று எண்ணும் வரை இடுப்புத் தள தசையைச் சுருக்கிப் பின் மூன்று எண்ணும் வரைத் தளர்த்தவும்.
 2. ஒரு தடவைக்கு 10-15 முறையாக ஒரு நாளுக்கு மூன்று தடவைச் செய்யவும்
 3. படுத்துக் கொண்டு கெகல் உடற்பயிற்சியைச் செய்யவும். இதுவே எளிதான நிலை. தசை இறுகும்போது, நீங்கள் விரும்பும்படி உட்கார்ந்தும் நின்றும் உடற்பயிற்சியைச் செய்யலாம்.

கர்ப்பமுறுதலின் ஆபத்தான காரணிகள் எவை?

சுற்றுச் சூழல் ஆபத்து

நாம் வீட்டிலோ, வேலையிலோ அல்லது வெளியிலோ இருக்கும்போது நம்மைச் சுற்றி இருக்கும் யாவுமே சுற்றுச்சூழல் ஆகும். நீங்கள் சுவாசிக்கும் அல்லது உட்கொள்ளும் ஒவ்வொரு சிறுசிறு விஷயத்தையும் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும், உங்கள் கர்ப்பத்தை அல்லது பிறக்காத சிறுகுழந்தையைப் பாதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் தவிர்ப்பது புத்திசாலித்தனமாகும்.

கர்ப்ப காலத்தில் கீழ்வருவனவற்றைத் தவிர்க்கவும்:

 • காரீயம் – சில நீரிலும் வண்ணப்பூச்சுகளிலும் காணப்படும் (முக்கியமாக 1978-க்கு முன் கட்டிய வீடுகளில்)
 • பாதரசம் – பெரிய, பிறமீன் தின்னும் மீன்களில் இதன் ஆபத்தான வகை காணப்படும்
 • ஆர்செனிக் – சில கிணற்று நீரில் அதிக அளவில் இருக்கும்
 • பூச்சுக்கொல்லிகள் – வீட்டு உபயோகப் பொருட்களிலும் விவசாய பூச்சிக்கொல்லிகளிலும்
 • கரைப்பான்கள் – கிரீஸ் அகற்றிகள், பெயிண்ட் அகற்றிகள், கலக்கிகள்
 • சிகரெட்டுப் புகை

எவ்வளவு தூரத்திற்கு இவை கர்ப்பக் கலைவு அல்லது பிறப்புக் குறைபாடுகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரியாத நிலையில் எவ்வளவு தூரத்திற்கு முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு இவற்றின் தாக்கத்தில் இருந்து தப்புவது நல்லது. இதோ சில எளிதான அன்றாடக பாதுகாப்பு முறைகள்:

 • நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களையே சுத்தம் செய்ய வேண்டும். பலகணிகளைத் திறந்து மின்விசிறியை ஓட விடவும்.
 • பொருட்களின் மேல் பாதுகாப்பான பயன்பாட்டிற்காக எழுதப்பட்டுள்ள கர்ப்பிணிகளுக்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
 • மாதமாக இருக்கும் போது அடுப்பின் உட்பகுதியை சுத்தம் செய்யக் கூடாது.
 • பெயிண்ட் அடிக்கும் போது வீட்டை விட்டுச் சென்று விட வேண்டும். அதன் நெடி அடங்கும் வரை வரக்கூடாது.

பணிபுரியும் இடத்தில் வேதிப்பொருட்களின் தாக்கம் இருந்தால் மருத்துவரிடமும் நிர்வாகியிடமும் கலந்து பேசி தாக்கத்தைக் குறைக்கும் வழிகளைக் காணவேண்டும். உலர்சலவை, உற்பத்தி, அச்சு, வேளாண்மை சார்ந்த சில தொழிலகங்கள் ஆபத்து விளைவிக்கும் நச்சுப் பொருட்களைப் பயன்படுத்தும்.

புகைத்தலைத் தவிர்த்தல்

புகைத்தல் ஆரோக்கியத்துக்குக் கேடானது. குழந்தையின் நலத்தையும் பாதிக்கும். புற்று நோயையும் இதய நோய்களையும் உண்டாக்குவது மட்டுமன்றி கர்ப்ப காலத்தில் புகைப்பதனால், பிறக்கும் குழந்தை எடை குறைந்து காணப்படும். எடை குறைந்து பிறக்கும் பிள்ளைகளின் உடல்நலம் பிறப்புக்குப் பின் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கர்ப்ப காலத்தில் புகைக்கும் பெண்களுக்கு பிற பெண்களைவிட கர்ப்ப கலைவு மற்றும் பிறக்கும் குழந்தைகள் பிறப்பு குறைபாடுகளான உதட்டு, அண்ணப் பிளவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் கர்ப்ப காலத்திலும் பேறுகாலத்திற்குப் பின்னும் புகைபிடிக்கும் பெண்கள் தங்கள் குழந்தைகளை சிசு மரணம் எனும் அபாயத்துக்கு உட்படுத்துகிறார்கள்.

போதைப்பொருள்

கர்ப்ப காலத்தில் மது மற்றும் சட்ட விரோதமான போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல் பிறக்கப்போகும் குழந்தைக்கு ஆபத்தை விளைவிப்பதாகும். அது போலவே சட்டத்துக்கு உட்பட்ட மருந்துகளைத் தவறாக பயன்படுத்துவதும். மதுவையும் போதைப்பொருளையும் பயன்படுத்தும்போது, இரத்ததில் கலப்பதும் நுரையீரலுக்குள் நுழைவதுமான வேதிப்பொருட்கள் நச்சுக்கொடியை ஊடுறுவி குழந்தைக்குள் புகுகிறது. இதனால், இறந்துபிறத்தல், எடைகுறைவாக பிறத்தல், பிறப்பு குறைபாடுகள், நடத்தைப் பிரச்சினைகள், வளர்ச்சி தேக்கம் போன்ற ஆபத்துக்களை குழந்தைகள் எதிர்கொள்ளுகின்றன.

மது

ஒரு கர்ப்பிணிப்பெண் மது அருந்துகிறார் என்றால் குழந்தையும் மது அருந்துகிறது என்று அர்த்தம். கர்ப்பிணிப்பெண் கருவில் மதுவால் ஏற்படும் கோளறுகளைத் தவிர்க்க மது அருந்தக்கூடாது. இதன் விளைவு குறைவாகவோ கடுமையாகவோ இருக்கும். முகத்தில் கோளாறு, கல்வித்திறன் குறைவு போன்ற பல பிரச்சினைகளோடு குழந்தை பிறக்கக் கூடும்.

மருத்துவரை எப்போது அழைக்க வேண்டும்?

கர்ப்பமாக இருக்கும் போது, உங்களுக்கு நெருடலாகவோ அல்லது கவலை தருவதாக எது ஒன்று இருந்தாலும் மருத்துவரையோ செவிலியரையோ அழைக்கத் தயங்க வேண்டாம். உடல் மாற்றங்கள் சில வேளைகளில் பிரச்சினைகளுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

கீழ்வரும் நிலைகளில் மருத்துவரையோ மருத்துவப் பணிப்பெண்ணையோ அழைக்கவும்:

 • பிறப்புறுப்பில் இரத்தம் அல்லது திரவக் கசிவு
 • முகம், கைகள், விரல்களில் திடீர் அல்லது கடுமையான வீக்கம்
 • கடுமையான அல்லது நீண்ட நேர தலைவலி
 • கீழ் வயிற்றில் அசௌகரியம், வலி அல்லது பிடிப்பு
 • காய்ச்சல் அல்லது குளிர் நடுக்கம்
 • வாந்தி அல்லது தொடர்ந்து குமட்டல்
 • சிறுநீர் கழிக்கும் போது அசௌகரியம், வலி அல்லது எரிச்சல்
 • பார்வைப் பிரச்சினைகள் அல்லது மங்கலான பார்வை
 • கிறுகிறுப்பு

28 வார கர்ப்பத்திற்குப் பின் குழந்தையின் அசைவு இயல்பை விட குறைவாக இருந்தால் சந்தேகப்பட வேண்டும் (2 மணி நேரத்தில் 10 அசைவை விட குறைவாக).

ஆதாரம் : தேசிய சுகாதார வலைத்தளம்

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad