திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

                                      Sri...
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி.

தமிழகத்தில் முருகப்பெருமான் ஸ்தலங்கள் பல இருந்தாலும், முக்கியமான ஆறு திருத்தலங்களை முருகனின் அறுபடை வீடுகளாக எண்ணி நாம் வழிபட்டு வருகிறோம்.

*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை
*அருள்மிகு சுப்பிரமணிய
சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி
*அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் (குழந்தை வேலாயுதர்)
*அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர்
*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பழமுதிர்சோலை, மதுரை
*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி, திருவள்ளூர்


திருத்தலம் அமைவிடம்:
அறுபடை வீடுகளில், ''குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்'' என்ற சொல் வழக்கிற்கு ஏற்ப திருசெந்தூரைத் தவிர, ஏனைய அனைத்துப் படைவீடுகளும் குன்றுகளின் மீதும், திருச்செந்தூர் மட்டும் அழகிய கடலோரத்திலும் அமைந்திருக்கின்றன. கடற்கரையில் இருந்து இத்திருக்கோயிலைக் காணும்போது இக்கோயிலின் தோற்றம் பேரழகு. அங்கே ஆர்ப்பரிக்குக்கும் அலைகள் ஓம் ஓம் ஓம் என முருகனை நினைத்து அவன் பாதம் தேடிவருவதாகவே தோன்றுகிறது. அந்த வெள்ளை நுரை அலைகள் செய்த பாக்கியம் தான் என்ன?! நாள்தொறும் தமிழ்கடவுளாம் முருகனை தரிசிக்கும் பேரு பெற்றுள்ளனவே!!

அழகன் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருசெந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து 64 km தொலைவிலும், தூத்துக்குடியில்இருந்து 45 km தொலைவிலும் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து 186 km தொலைவிலும் அமைந்துள்ளது.


திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : சுப்பிரமணிய சுவாமி
உற்சவ மூர்த்தி : அலைவாய் பெருமாள், சண்முகர், ஜெயந்தி நாதர், குமர விடங்கர்
தல இறைவி : வள்ளி, தெய்வானை
தல தீர்த்தம் : சரவண பொய்கை

திருத்தல வரலாறு:
புராணங்களில் திருச்சீர் அலைவாய் என்று போற்றி புகழப்பட்டுள்ளது இத்திருத்தலம். முன்னொரு காலத்தில் தேவர்கள் அனைவரும் இந்திரனின் தலைமையில் ஒன்று கூடி சிவபெருமானையும், பார்வதி தேவியையும் காணச் சென்றனர் கைலாயத்திற்கு. தங்களை அசுரர்களிடம் இருந்து காக்கவேண்டும் என மன்றாடினர். அச்செயலைப் புரிவதற்கு ஒரு சிறந்த வீரனைத் தந்தருளும்படி கேட்டனர். அவர்களது வேண்டுகோளை ஏற்ற சிவபிரான், சத்யோஜாதம், வாமதேவம், சத்புருஷம், ஈசானம், அகோரம், ஆகிய ஐந்துமுகங்கள் மட்டுமல்லாது, ஞானிகளுக்கு மட்டுமே புலப்படும் அதோமுகத்தினையும் சேர்த்து ஆறுமுகங்களோடு காட்சி அளித்தார். அத்தருணத்தில் அவரது ஒவ்வொரு திருமுகத்திலும் இருந்த ஒவ்வொரு நெற்றிக் கண்ணிலிருந்தும் ஒரு ஜோதி உருவானது. இவ்வண்ணம் தோன்றிய ஜோதிப் பொறிகளை ஒன்றுசேர்த்து, ஓர் அக்னிப் பிழம்பாக ஆக்கி வாயு தேவனிடமும், அக்னி பகவானிடமும் தந்து கங்கா தேவியிடம் சேர்த்துவிடும்படி பணித்தார்.


எல்லையற்ற ஆனந்தத்துடன் அதனை ஏற்ற கங்காதேவி, இமயமலையில் உள்ள சரவணப்பொய்கையில் கொண்டு சேர்த்தார். கற்பனைகளை மீறிய அழகுடன் திகழ்ந்த குழந்தைகளாகத் தெரிந்தன, அந்த அக்னிக் குஞ்சுகள் விஷ்ணு பகவானுக்கு. கார்த்திகை நட்சத்திரங்களாக விளங்கும் கார்த்திகைப் பெண்களை அழைத்து அந்த தெய்வீகக் குழந்தைகளுக்குப் பாலூட்டுமாறு கூறினார். இவ்வாறு கார்த்திகைப் பெண்களின் அன்பில் வளர்ந்து வந்த இக்குழந்தைகளை சிவனும், பார்வதியும் வந்து பார்த்தனர். அன்பின் மிகுதியால் பார்வதி அக்குழந்தைகளை எடுத்து அணைத்தபோது ஆறு குழந்தைகளும் ஒன்று சேர்ந்து, ஆறு முகங்களுடனும், பன்னிரண்டு கரங்களுடனும், ஓர் உருவத்தில் காட்சி தந்து கந்தன் என்ற பெயருடன் விளங்கினார். முருகனது அருமை, பெருமைகளை கந்தபுராணம் என்ற நூல் அழகாக விளக்குகிறது. கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததினால் கார்த்திகேயன் என்ற பெயரையும் பெற்றார்.


காசியப முனிவருக்கு சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் என்ற மூன்று மகன்களும், அஜமுகி என்ற மகளும் பிறந்தனர். அசுர குணத்துடனேயே பிறந்த இவர்கள் தங்களது குருவின் சொல்படி கடும் தவங்கள் புரிந்து பல்வேறு சக்திகளைப் பெற்றனர். இத்தகைய பொல்லாத சக்திகளைக் கொண்டு மூவுலகிலும் எல்லா மக்களையும் ஆட்டிப் படைத்தனர். சூரியன், சந்திரன், எமன், குபேரன், இந்திரன், அக்னிதேவன், தேவர்கள் போன்றோர் சூரபத்மனுக்கு அடிமைகள் போல செயல்பட வேண்டியிருந்தது. இதனைக் கண்டு பொறுக்காமல், சிவன், முருகனை அழைத்து இவ்வுலகத்தை தீய சக்திகளிடம் இருந்து காக்கும்படி ஆணையிட்டார். தனது தந்தையின் ஆணைப்படி தனது படைகளுடன், மாயபுரிக்குச் சென்ற கந்த பிரான் தன் படைத் தளபதி வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பினார். தூதுவனையும் தூற்றி அனுப்பினான் அந்த அசுரன்.

கார்த்திகேயன் படைப் பரிவாரங்களுன் தங்கி இருந்த இடமே திருச்செந்தூர். தேவர்களை சிறைபிடித்த சூரபத்மன், அவர்களை விடுவிக்குமாறு முருகன் எத்தனை கேட்டும் செய்யவில்லை. அவர்களைக் காக்க இறைவன் அசுரர்கள் மீது படையெடுத்து போர்புரிந்த இடமும் இந்த திருசெந்தூர்தான். நீண்ட போருக்குப் பின் தர்மத்தை வென்றார் முருகன். கடம்பன், கதிர்வேலன் வீசிய வேல் சூரபத்மனின் தேகத்தை இரு கூருகளாக்கியது. இவ்வாறு பிளவுபட்ட சூரனது உடலின் ஒரு பகுதி சேவலாகவும், மறுபகுதி மயிலாகவும் உருமாறியது. கருணைக் கடலான கந்தன் சேவலை தனது கொடியிலும், மயிலைத் தனது வாகனமாகவும் கொண்டு சூரனை ஆட்கொண்டார்.

திருக்கோயில் சிறப்பு:
முத்துக்குமரனின் திருப்பாதங்கள் பட்ட இடம் தான் இந்த திருச்செந்தூர். பல அரிய நம்மால் காணமுடியாத சூட்சுமங்களைக் கொண்ட பகுதி இந்த திருச்செந்தூர் கடற்பகுதி. இந்த கடல் பகுதிக்குசண்முக விலாசம் என்ற பெயருண்டு. இங்கே 24புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இவை காயதிரி மந்திரத்தின் 24 எழுத்துக்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள்.

ஐப்பசி மாத வளர்பிறை அன்று சூரனை வதம் செய்து வெற்றி கொண்ட தினம் என்பதால், இங்கே நடைபெறும்சூரசம்ஹார விழா மற்றும், கந்த சஷ்டி விழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் கடல் போல வந்து சேருகின்றனர். சூரசம்ஹாரம் நடக்கும் நேரத்தில் கூடும் கூட்டத்தைப் பார்க்கும் போது கடல் நிலத்தில் உள்ளதோ என்று நினைக்கும் அளவிற்கு அத்தனைக் கூட்டம் கந்தனைக் காண. இத்திருத்தலத்தில் முருகன் மும்மூர்த்திகளுடன் தொடர்புடையவர் என்று விளக்கும் விதத்தில் காட்சி அளிக்கிறார். ஆவணி மற்றும் மாசி மாதங்களில் இக்கோயிலில் நடைபெறும் திருவிழாவின்போது 7-ம் நாள் மாலை வேளையில் சிவப்பு நிற ஆடை உடுத்தி சிவபிரானின் அம்சமாகவும், அடுத்தநாள் 8-ம் நாள் அதிகாலை வேளையில் வெள்ளை நிற ஆடை உடுத்தி பிரம்மாவின் வடிவமாகவும், அன்றே மதிய வேளையில் பச்சை நிற ஆடை உடுத்தி விஷ்ணுவின் அம்சமாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.


நாங்கள் திருச்செந்தூர் சென்றிருந்த அன்று மதிய வேளையில் பச்சை உடை உடுத்தி எங்களுக்கு காட்சி தந்தார் முருக பெருமான். அன்று ஊரே பச்சை வண்ணமாக காட்சி தந்தது. அங்கு கந்தனைக் காண வந்த அவ்வூர் பெண்கள் முருகன் உடுத்திய பச்சை வண்ணத்திலேயே ஆடை அணிந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்த போது திருவிழாவின்போது முருகன் அணியும் ஆடை வண்ணத்திலேயே ஒவ்வொரு நாளும் தாங்களும் அதே வண்ணத்திலேயே உடை அணிவது வழக்கம் என்று சொன்னார்கள். இத்தலத்தில் கொடுக்கப்படும் மூலிகை சக்தி நிறைந்த இலை விபூதி அனேக நோய்களை தீர்க்கும் சக்தி உடையது.

முருகன் ஸ்ரீ வள்ளியை மணந்த இடமும் இதுதான். சூரனை போரில் வென்ற பின்பு தெய்வானையை திருக்கல்யாணம் புரிந்த இடமும் இதுதான். இந்த திருக்கோயிலில் முருகனுக்கு நான்கு உற்சவ தோற்றங்கள் உண்டு. இவர்களுக்கு தனித்தனியே சன்னதிகள் உண்டு. சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் போன்றோர் உற்சவர்கள். குமர விடங்கருக்கு மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரும் உண்டு. இத்திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள ''சந்தன மலை''யின் மேல் அமைந்துள்ளது. நாளடைவில், காலப் போக்கில் அது மறைந்து விட்டது. இவ்விடத்தை கந்த மாதன பர்வதம் என்றும் அழைக்கிறார்கள்.

இத்திருத்தலம் ''குரு பரிகார'' தலமாகவும் விளங்குகிறது. சூரனை அழிக்க கந்தன் இங்கு வந்த போது முருகனுக்கு அசுரர்களின் வரலாற்றை குருபகவான் அருளியுள்ளார். திருசெந்தூரிலேயே கோயில் கட்டி இங்கேயே முருகனை இருக்கச் சொல்லியுள்ளார். இத்தலத்தில் கார்த்திகேயன் ''ஞானகுரு''வாக விளங்குவதால், குருபெயர்ச்சி விழாவும் இங்கே சிறப்பாக நடைபெறுகிறது.


கடலைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கும் அழகன் முருகன், சூரனை அழித்தது போல இன்று உலகில் நிலவும் அத்தனை கொடியவைகளையும் அழிக்க, வேண்டுவோம் முருகனை, கடம்பனை, கதிர்வேலனை!!!!
மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad