கணத்த வரிகளுடன் கவிதை

கவிஞர் பெயர் தெரியவில்லை

இன்றோடு...
அவள் இறந்து
இருபது நாளாயிற்று.

உறவுக் கூட்டம் அத்தனையும்
தீராத் தனிமையை விட்டு விட்டு
தத்தம் வாழ்வுகளுக்கு
திரும்பி விட்டன...

மூத்தவன்
இன்று தான் மீண்டும்
பள்ளி போனான்.
அவனுக்கு
'அம்மா இனி வரமாட்டாள்'
என்பது
புரிய ஆரம்பித்திருந்தது...
காலுறைகளை
தானே அணியக்
கற்றுக் கொண்டுவிட்டான்.

ஆனால்....

பள்ளி செல்லாத
இளையவளுக்குத் தான்
இன்னும் புரியவில்லை.

அவள் உலகில்
இறப்பு என்ற சொல்
இன்னும் பிறக்கவில்லை.

தன்னிடம்
'கோபித்துக் கொண்டே
அம்மா
எங்கோ சென்றுவிட்டாள்...'
என நம்புகிறாள்.

தொலைக் காட்சியில்
ஏதோ ஒரு நடிகையைப் பார்த்து
''அம்மா...'' என்று
விழி விரிய கத்துகிறாள்....

கடைத் தெருவில்
பொம்மைகளை விட்டு விட்டு
யாரோ ஒரு பெண்
பின்னால்
கை உதறி ஓடுகிறாள்....

நடு இரவில்
படுக்கையில்
அனிச்சையாய் 
உறக்கத்திலும்
அம்மாவின் கூந்தலைத்
தேடுகிறாள்....

அவள் புடவையைத்
திரும்பத் திரும்ப
முகர்ந்து பார்க்கிறாள்.... 

எப்போதோ
மறந்திருந்த
விரல் உண்ணும்
பழக்கத்தை திரும்ப 
ஆரம்பித்திருக்கிறாள்....

திரும்ப வந்ததும்
அம்மாவிடம் காண்பிப்பதற்கு
ஏராளமாய்ப் பொருட்கள்
சேர்த்து வைத்திருக்கிறாள்.

குளிப்பாட்டுவதற்கு
என்னை அனுமதிப்பதில்லை!
'ஆண்கள் முன்னால்
ஆடையற்றிருப்பது கூடாது'
என்று அவள்
அம்மா சொல்லியிருக்கிறாள்.

இன்று காலை
சாப்பிடாமல்
முரண்டு பண்ணி
அடி வாங்கினாள்...

அவள் அழுது 
கொண்டிருக்கையிலேயே
கிளம்பி
அலுவலகம் வந்துவிட்டேன்.
மனைவி என்றாலும் 
அதற்கு மேல் அழ
அலுவலகம் அனுமதிக்காது.

மதியம்
அவள் பாட்டி
மூலமாக போன் செய்தாள்...

''அப்பா நான் சாப்ப்பிட்டுட்டேன்''
எனறாள் மழலையில்.

'இனி சேட்டை செய்வதில்லை'
என்று உறுதி அளித்தாள்!

பிறகு தயக்கமாய்...
மறக்காமல்,
'இந்த விபரத்தை
அம்மாவிடம்
தெரிவிக்கச் சொன்னாள்!

அலுவலகம் என்பதையும்
மறந்து
நான்
பெரும் குரலெடுத்து
அழ ஆரம்பித்தேன்......


Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad